ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள நியூ மெடிக்கல் அரசு மருத்துவமனையில், சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு ஐந்து பிரசவித்த தாய்மார்கள் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்த தீவிர விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அந்த அதிர்ச்சி அறிக்கையின்படி, பிரசவத்திற்குப் பின் பெண்களுக்கு ஏற்படும் கடுமையான இரத்தப்போக்கை நிறுத்துவதற்காக செலுத்தப்பட்ட ‘ஆக்ஸிடாசின்’ (Oxytocin) என்ற முக்கிய ஊசி மருந்து முற்றிலும் போலியானது என அம்பலமாகியுள்ளது.

அந்த இன்ஜெக்ஷனில் மருந்துக்கு பதிலாக வெறும் தண்ணீர் மட்டுமே நிரப்பப்பட்டிருந்ததால், பெண்களுக்கு ஏற்பட்ட ரத்தப்போக்கை கட்டுப்படுத்த முடியாமல் அவர்களின் உடல்நிலை மோசமடைந்து, இறுதியில் 5 பிரசவித்த பெண்களும் கொடூரமாக மரணமடைந்துள்ளனர் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.