குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தின் ஹாலோல் நகரில் உள்ள யமுனாநகர் சொசைட்டியில் கள்ளக்காதல் சந்தேகத்தால் கணவனே மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரித்விராஜ் சவுகான் என்ற நபருக்கு, தன் மனைவி தீபிகாவுக்கும் அவளது சொந்த மருமகனுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாகக் கள்ளத்தொடர்பு இருந்ததாகச் சந்தேகம் இருந்து வந்தது.
இந்த நிலையில், தீபிகாவின் வாட்ஸ்அப் உரையாடல்களைப் பார்த்த பிரித்விராஜ், அதில் தன் மனைவியும் மருமகனும் நெருக்கமாகப் பேசியிருந்ததை அறிந்து கடும் ஆத்திரமடைந்தார். இதனால் வீட்டில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது கொலையில் முடிந்தது.
இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறிய போது தம்பதியரின் 14 வயது மகள் அங்கேயே இருந்துள்ளார். தன் தந்தையின் ஆத்திரத்தைப் பார்த்த அந்தச் சிறுமி, “அப்பா, அம்மா இறந்துவிட்டால் நானும் வாழ மாட்டேன், அம்மாவை விட்டுவிடுங்கள்” என்று கண்ணீருடன் கெஞ்சிக் கதறியுள்ளார்.
ஆனால், மகளின் அலறலையும் கெஞ்சலையும் சிறிதும் பொருட்படுத்தாத பிரித்விராஜ், ஒரு கூர்மையான ஆயுதத்தால் தன் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார். இந்த கோரச் சம்பவத்திற்குப் பிறகு, அவரே நேரடியாகக் காவல் நிலையத்திற்குச் சென்று தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
