கடலூர் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். கடந்த 16-ஆம் தேதி சசிகலாவும் அதே ஊரில் வசிக்கும் தேவி என்பவரும் மகளிர் சுய உதவி குழு பணம் சேமிப்பு தொடர்பாக கடன் பெற்றது குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை பார்த்ததும் மீன் வெட்டிக் கொண்டிருந்த தேவியின் கணவர் பாஸ்கரன் சசிகலாவை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். மேலும் மின்வெட்டும் கத்தியால் சசிகலாவை வெட்ட வந்தார். இதனை பார்த்ததும் சசிகலாவின் கணவர் முருகன் அவரை தடுத்து நிறுத்தினார். இதில் முருகனின் இடது கையில் கத்தி பட்டு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காயமடைந்த முருகனை சசிகலா இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.

அப்போது தேவி இருசக்கர வாகனத்தை காலால் எட்டி உதைத்து கையில் இருந்த ஐஸ் உடைக்கும் கட்டையால் சசிகலாவை அடித்து மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த முருகனும், சசிகலாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் பாஸ்கர், அவரது மனைவி தேவி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.