பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள் மீண்டும் பதற்றமான கட்டத்திற்கு சென்றுள்ளன. அதன் தொடர்ச்சியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் இராணுவ நடவடிக்கையால் மூன்று நாட்கள் நீடித்த மோதல் உருவானது. இறுதியாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சீராக்கினாலும், இரு நாட்டிற்கும் இடையிலான விரிசல் இன்னும் நீடிக்கிறது.

இந்த சூழ்நிலையில் தான், பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, எந்த ஒரு நாட்டு மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது மற்றொரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாக கருதப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதன் படி, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு துணையாக வர வாய்ப்பு உள்ளது. இது இந்தியாவை சிரமத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கிறது, ஏனெனில் இந்தியா – சவுதி அரேபியா இடையே நல்ல உறவு காணப்படுகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃபிடம், இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் சவுதி அரேபியா தலையிடுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நிச்சயமாக, இதில் சந்தேகமே இல்லை. நேட்டோ ஒப்பந்தத்தின் 5வது பிரிவை போலவே, இந்த ஒப்பந்தமும் கூட்டு பாதுகாப்பு அடிப்படையில் அமைந்தது. ஒருவருக்கெதிராக தாக்குதல் நடத்தப்பட்டால், அது அனைவருக்கும் எதிராக தாக்குதல் நடத்தப்படுவதாக கருதப்படும். அதேபோன்று இந்த ஒப்பந்தமும் செயல்படும்” எனக் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது, “இந்த ஒப்பந்தம் ஒரு தாக்குதல் ஏற்பாடு அல்ல. இது பாதுகாப்பு ஏற்பாடு மட்டுமே. பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா மீது ஏதேனும் தாக்குதல் ஏற்பட்டால், அந்த ஆக்கிரமிப்பை இருநாடுகளும் இணைந்து எதிர்த்து விடும். இது எங்களை மிரட்டும் நாடுகளுக்கு எச்சரிக்கையாக அமையும். ஆனால், எப்போதும் பாதுகாப்புக்காக மட்டுமே இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்துவோம்” எனவும் அமைச்சர் கவாஜா ஆசிஃப் விளக்கமாக தெரிவித்தார்.