நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களில் சிறுமி உட்பட 4 பேரை சிறுத்தை தாக்கியது. அதில் சரிதா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன்தினம் தொட்டியாளம் பகுதியில் வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பெண்கள் அலறும் சத்தம் கேட்டது. உடனே வனத்துறையினர் ஓடி சென்று விசாரித்தனர். அப்போது தேயிலை செடிகளுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை குழந்தையை கவ்வி சென்றதாக பெண்கள் கூறினர். உடனடியாக வனத்துறையினர் தேயிலை செடிகளை விளக்கி தேடிய போது கழுத்து பகுதியில் படுகாயங்களுடன் சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிறுமியை பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே சிறுமி உயிரிழந்தார்.

இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் மேங்கோ ரேஞ்ச் தனியார் எஸ்டேட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிவசங்கர்-மிலாந்திதேவி தம்பதியினர் வேலை பார்க்கின்றனர். அவர்களது 3 வயது மகள் நான்சி தொட்டியாளம் மங்கன்வாடி மையத்தின் முன்பு சக குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென தேயிலை தோட்டத்தில் இருந்து பாய்ந்து வந்த சிறுத்தை நான்சியை கவ்வி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.