மும்பையில் உள்ள உயர் நீதிமன்றம் கணவன், மனைவி இடையே விவாகரத்தின் போது மனைவியின் தகாத உறவை உறுதிப்படுத்துவதற்காக குழந்தைக்கு டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிட முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது 2011 இல் இருவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் 2013 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

அந்த சமயத்தில் மனைவி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் அவருடைய கணவர் மனைவியின் தகாத உறவினால் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில் குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை நடத்த கூறியிருந்தார். ஆனால் அந்த மனுவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

இதற்கு முன்பாக குடும்ப நீதிமன்றம் மைனர் குழந்தைக்கு டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவு அளித்த நிலையில், தற்போது மும்பை உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி ஆர் எம் ஜோதி கூறும்போது, “இது போன்ற ரத்த பரிசோதனைகள் நடத்த மிகவும் முக்கியமான சமயங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும், மனைவியின் தகாத உறவினால் கணவருக்கு விவாகரத்து கோர உரிமை உள்ளது.

ஆனால் டிஎன்ஏ சோதனைக்கு உத்தரவிட முடியாது என்று கூறிய நிலையில் வேறு ஆதாரங்கள் மூலம் அதனை உறுதிப்படுத்தலாம்” என்றும் தெரிவித்தார். மேலும் கணவன், மனைவி இடையே குழந்தையை கருவியாக்குவது தவறு, முடிவெடுக்கும் திறன் இல்லாத ஒரு மைனர் குழந்தையை இது போன்ற DNA பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை கட்டாயப்படுத்த முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.