ரயில்களில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான மக்களில் பெரும்பாலோர் பொதுப் பெட்டிகளையே பயன்படுத்துகின்றனர். இந்த பெட்டிகள் எப்போதும் ரயிலின் இரு முனைகளிலும் அமைக்கப்படுவதற்குப் பின்னால் முக்கிய தொழில்நுட்பக் காரணங்கள் உள்ளன.
பொதுப் பெட்டிகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அங்கு எடையும் அதிகமாக இருக்கும். இந்த அதிகப்படியான எடை ரயிலின் நடுப்பகுதியில் குவிந்தால் அது ரயிலின் சமநிலையைப் பாதித்து வளைவுகளில் திரும்பும்போதும் அதிக வேகத்தில் செல்லும்போதும் தடம் புரளும் அபாயத்தை ஏற்படுத்தும்.
எனவே எடையைச் சமமாகப் பகிர்ந்து ரயிலின் இயக்க நிலைத்தன்மையை உறுதி செய்யவே பொதுப் பெட்டிகள் முன்புறமும் பின்புறமும் இணைக்கப்படுகின்றன. மேலும் பயணிகள் வசதி மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் இந்த முறை பின்பற்றப்படுகிறது.
நடைமேடையின் நடுப்பகுதியிலேயே அனைத்துப் பயணிகளும் திரள்வதைத் தடுத்து இரு முனைகளிலும் கூட்டத்தைப் பிரிப்பதன் மூலம் முன்பதிவு செய்த பயணிகள் இடையூறின்றி பயணிக்க முடிகிறது. அவசர காலங்களில் அல்லது விபத்து நேரங்களில் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கொண்ட பொதுப் பெட்டிகளில் இருந்து மக்களை விரைவாக வெளியேற்றவும் இந்த அமைப்பு பெரிதும் உதவுகிறது.
சாமானிய மக்களின் பாதுகாப்பு மற்றும் ரயிலின் சீரான இயக்கத்தைக் கருத்தில் கொண்டே இந்த நடைமுறை காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
