மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு மாவட்டத்தில் ஊராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தனது 6 வயது மகளையே தந்தை கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேரூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங் கொண்டமங்லே என்ற 28 வயது நபர் அந்த ஊரின் ஊராட்சித் தலைவராகப் போட்டியிட விரும்பினார்.

இருப்பினும் மகாராஷ்டிர மாநில ஊராட்சி சட்டத்தின்படி 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விதி அவருக்குத் தடையாக இருந்தது. அவருக்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று குழந்தைகள் இருந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் தகுதியைப் பெற தனது மகளைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.

இந்தச் சதித் திட்டத்திற்கு அந்த ஊரின் தற்போதைய ஊராட்சித் தலைவரான கணேஷ் ஷிண்டேவும் உடந்தையாக இருந்துள்ளார். திட்டத்தின்படி பாண்டுரங் தனது மகளைத் தெலுங்கானா மாநிலம் நிஜாம்சாகர் கால்வாய்க்கு அழைத்துச் சென்று நீரில் தள்ளி கொலை செய்துள்ளார்.

கால்வாயில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து குற்றவாளி அடையாளம் காணப்பட்டார். போலீஸாரின் விசாரணையில் தனது அரசியல் ஆசைக்காகப் பெற்ற மகளையே கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து தந்தை பாண்டுரங் மற்றும் அவருக்கு உதவிய ஊராட்சித் தலைவர் கணேஷ் ஷிண்டே ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.