மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் (Coldrif) என்ற இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், ராஜஸ்தானிலும் இதே போன்ற இருமல் மருந்துகளால் குழந்தைகள் இறந்துள்ளனர்.

இந்தப்  உயிரிழப்புகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. பரிசோதனைகளில், இந்த மருந்துகளில் டைஎதிலீன் கிளைக்கால் (Diethylene Glycol) என்ற நச்சு ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் தாக்கமாக, மத்திய பிரதேசத்தில் மேலும் இரண்டு இருமல் மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் உலக சுகாதார அமைப்பின் (WHO) கவனத்தை ஈர்த்து, விரிவான விசாரணையைத் தொடங்கச் செய்துள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் (Sresan Pharmaceuticals), ரெஸ்பிஃப்ரெஷ் டிஆர் (Respifresh TR, Rednex Pharmaceuticals), ரீலைப் (ReLife, Shape Pharma) ஆகிய மூன்று இருமல் மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மருந்துகள் கடுமையான உடல்நலக் குறைவுகளையும், உயிருக்கு ஆபத்தான நோய்களையும் ஏற்படுத்தக்கூடியவை என்று அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தப் பாதிக்கப்பட்ட பேட்ச்கள் (batches) எந்த நாட்டிலும் கண்டறியப்பட்டால், உடனடியாக அறிவிக்குமாறும் WHO நாட்டு சுகாதார அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

முன்னதாக, இந்தியா தனது கலப்பட மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.