இந்தியாவில் தெருவோரக் கடைகளில் பழைய செய்தித்தாள்கள் மற்றும் காகிதங்களை உணவுத் தட்டுகளாகப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு புகைப்படம் அனைவரையும் தூக்கி வாரிப் போட வைத்துள்ளது. ‘Moronhumor’ என்ற எக்ஸ் (X) தள பக்கத்தில் பகிரப்பட்ட அந்தப் புகைப்படத்தில், ஒரு நபர் தெருவோரக் கடையில் வாங்கிய தின்பண்டம் ஒரு காகிதத் தட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் காகிதத் தட்டை உற்றுப் பார்த்தால், அது ஒரு வங்கியின் முக்கியமான ஆவணம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதில் வாடிக்கையாளரின் பெயர், இருப்பிடம் மற்றும் பணப் பரிமாற்றம் குறித்த ரகசிய விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. சில விவரங்கள் அழிக்கப்பட்டிருந்தாலும், பல தகவல்கள் அப்படியே படிக்கும் வகையில் உள்ளன.

“இந்தியாவில் உங்கள் தரவு பாதுகாப்பு (Data Privacy) உங்கள் கைகளில் கூட இல்லை” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்த பதிவு, பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “வாடிக்கையாளரின் விவரங்கள் அடங்கிய காகிதங்கள் எப்படி தெருவோரக் கடைகளுக்கு வந்து சேர்கிறது? இதற்கு வங்கிகள் பதில் சொல்லுமா?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.