சென்னை, கொடுங்கையூர் யூனியன் கார்ப்ரேட் காலனியைச் சேர்ந்த உதயசங்கர் என்பவரின் மனைவி நிஷாந்தி, கடந்த அக்டோபர் 24ஆம் தேதி இரத்தப் புற்றுநோயால் உயிரிழந்த சோகத்தில் இருந்து அவரது 16 வயது மகன் திரூஸ் மீள முடியாமல் தவித்து வந்துள்ளார்.

பரந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்புப் படித்து வந்த திரூஸ், சிலம்பம், கராத்தே போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்றுப் பல பதக்கங்களை வென்றவர்.

தாயின் மறைவுக்குப் பின், திரூஸ் அடிக்கடித் தந்தையிடம் “அம்மா இல்லாமல் வாழவே பிடிக்கவில்லை” என்று கூறி, மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

வழக்கம் போலத் தனது தங்கை ஹர்ஷிதாவுடன் டியூஷன் செல்ல மறுத்த திரூஸ், ஹர்ஷிதாவை மட்டும் தனியே அனுப்பியுள்ளார். தந்தை வெளியில் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த திரூஸ், தனது தாயின் புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இரவு 9 மணிக்கு டியூஷன் முடிந்து வீடு திரும்பிய ஹர்ஷிதா, அண்ணன் கதவைத் திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோது திரூஸ் உயிரிழந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீசார், சிறுவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே மாதத்தில் மனைவி மற்றும் மகனை இழந்த தந்தை உதயசங்கர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளார்.