வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனப்பகுதியில் நாய்கனேரி, சேரங்கல், பத்தலப்பள்ளி, எருக்கம்பட்டு, குண்டலப்பள்ளி உள்ளிட்ட காப்புக்காடுகளில் சிறுத்தை, யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆந்திர எல்லையில் உள்ள நெல்லிபட்லா வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லையில் உள்ள அரவத்லா, பஸ்மர் மலை கிராமங்களுக்கு குட்டி யானை உட்பட 7 காட்டு யானைகள் இடம் பெயர்ந்து பயிர்களை சேதப்படுத்துவது சமீபகாலமாக தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்கள் ஆகும்.

மேலும், ஆந்திர மாநிலம் கடப்பநத்தம் பகுதியில் இருந்து 3 குட்டிகள் உட்பட 9 காட்டு யானைகள் தமிழக எல்லையில் உள்ள கொட்டயூர் கிராமத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்தும், தென்னை மரங்களை வேரோடு சாய்த்தும் சேதப்படுத்தின. பேரணாம்பட்டு வனத்துறையினர், வனசரகர் சதீஷ்குமார் தலைமையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், வனத்துறை அதிகாரி சதீஷ் குமார், வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார், இரவு நேரத்தில் விளைநிலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், பத்தலப்பள்ளி மலைப்பாதை வழியாக ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு மாலை 6 மணிக்குப் பிறகு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும்   அறிவுறுத்தினார். யானைகள் நடமாட்டம் இருந்தால் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.