நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோயம்புத்தூர் மாவட்டம் காரமடைக்கு சாலை செல்கிறது. அடர்ந்த வனப்பகுதியின் நடுவே இருக்கும் இந்த சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால் மாலை 6 மணிக்கு பிறகு வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மஞ்சூர்- கோவை சாலையில் இரண்டு குட்டிகளுடன் 5 யானைகள் முகாமிட்டுள்ளது.

நேற்று கெத்தையிலிருந்து மஞ்சூர் நோக்கி அரசு பேருந்து சென்றது. அப்போது யானைகள் சாலையின் குறுக்கே நிற்பதை பார்த்ததும் ஓட்டுநர் சற்று தொலைவிலேயே வாகனத்தை நிறுத்தினார். இந்நிலையில் யானைகள் அரசு பேருந்தை வழிமறித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். சிறிது நேரம் கழித்து யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.