நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே முதுமலை வனப்பகுதி வழியாக கர்நாடக மாநில மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. அந்த பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக கக்கனல்லா சோதனை சாவடி பகுதியில் புலி நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் ஒரு வாகனம் தொரப்பள்ளியில் இருந்து கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வந்த ஆண் காட்டு யானை வாகனத்தை ஆக்ரோஷமாக விரட்ட தொடங்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டுனர் சாமர்த்தியமாக வாகனத்தை பின்னோக்கி ஓட்டி சென்று தப்பித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, வனப்பகுதி சாலைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் இருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும். வாகனத்தை சாலையில் நிறுத்தி செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.