சென்னை விமான நிலையத்தில் விசக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் மனது முழுக்க முழுக்க இங்கே தான் இருக்கும் என்று தவெக தலைவர் விஜய் கூறியது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், விஜயின் மனது மேடையில் இல்லை, என்னை நோக்கியே இருந்துள்ளது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அவர் மேடையில் இருந்தாலும், நான் எங்கே இருக்கிறேன் என்பதை நினைத்துக் கொண்டே இருக்கிறார். நான் கலந்து கொள்ளவில்லை என்பதில் அவருக்கு வருத்தம், ஒரு ஆதங்கம்.
அதனால் தான் அவர் அப்படி பேசி இருக்கிறார். அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்பது என்னுடைய சுதந்திர முடிவு. கட்சி மற்றும் கூட்டணியின் நலனை கருதிக்கொண்டு, சனாதன சக்திகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது என்று இந்த முடிவு எடுத்தேன். நான் கலந்து கொள்ளாமல் போனது தவெக தலைவர் விஜய் கூறுவது போல எந்த ஒரு அழுத்தமும், காரணமும் இல்லை. திமுகவோ, அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகளோ எனக்கு எந்த ஒரு அழுத்தமும் தரவில்லை. அவ்வாறு அழுத்தத்துக்கு பணிந்து இணங்கி முடிவெடுக்க முடியாமல் நிற்க்கும் நிலை எனக்கோ, விசிக கட்சிக்கோ இல்லை என்று கூறினார்.