சென்னை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜாராமன் (54). அவர் ஒவ்வொரு வார விடுமுறையும் தனது நண்பர்களுடன் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோன்று வழக்கம் போல கடந்த ஜூலை 18ஆம் தேதி தனது நண்பர்கள் ராக்கி, அய்யப்பன் ஆகியோருடன் எழும்பூர் பாண்டியன் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் வீடியோ கேம் விளையாடி கொண்டு இருந்தார்.
அப்போது அவரும் அவருடன் வந்த இரு நண்பர்களும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீடியோ கேம் விளையாடி முடித்ததும் வீட்டிற்கு ராஜா ராமன் கிளம்பியுள்ளார். அதனால் அவருக்கும் அவரது நண்பர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்தத் தகராறில் ராஜாராமனை அவரது நண்பர்கள் கொடூரமாக தாக்கி கீழே தள்ளி உள்ளனர்.
அதில் தலையில் பலத்த காயம் அடைந்ததால் ராஜா ராமன் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே சரிந்துள்ளார். அதனைக் கண்ட அருகில் நின்றவர்கள் உடனடியாக அவரை மீட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ராஜா ராமன் மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஏற்கனவே விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் சப்இன்ஸ்பெக்டரை கீழே தள்ளி கொலை செய்த அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
