தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அபர்ணா பாலமுரளி. இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்த சூரரைப் போற்று ‌ படத்திற்காக தேசிய விருது பெற்றார். இவர் தற்போது மலையாள சினிமாவில் தங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் படத்தின் நாயகன் வினித் சீனிவாசனுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி எர்ணாகுளத்தில் உள்ள சட்ட கல்லூரியில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஒரு மாணவர் அபர்ணா பாலமுரளிக்கு பூங்கொத்து கொடுத்து கைகுலுக்கினார். உடனே அந்த மாணவர் நடிகையின் தோளின் மீது கை போட்டார்.

உடனே சுதாகரித்துக் கொண்ட அபர்ணா நைசாக நழுவி விட்டார். இருப்பினும் அந்த மாணவர் மீண்டும் அபர்ணா மீது கை போட முயற்சி செய்ததார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மன்னிப்பு கேட்டதோடு அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்த மாணவரையும் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் நடிகை அபர்ணாவுக்கு பொது இடத்தில் நேர்ந்த சம்பவத்திற்கு பாடகி சின்மயி மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகியோர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாடகி சின்மயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்த சம்பவம் சட்டக்கல்லூரியில் நடந்துள்ளது. இந்த மனிதன் எப்படி அபர்ணா பால முரளியிடம் பேச அனுமதிக்கப்படுகிறான் என்பதுதான் நம்ப முடியாதது. இது பயங்கரமானது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதேபோன்று நடிகை மஞ்சிமா மோகன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த சம்பவம் நம்ப முடியாததாகவும், அருவருக்கத்தக்க செயலாகவும் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.