அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கப் போவதாகத் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வரும் நிலையில், அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் மோட்ஸ்ஃபெல்ட் செய்தியாளர்களிடம் பேசும்போது மிகுந்த மனவேதனையுடன் கண்ணீர் விட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோருடன் வாஷிங்டனில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிந்தது.
Greenland’s Foreign Minister Vivian Motzfeldt gets emotional on live TV: “We are doing our utmost. But the last days, naturally… oh, I am getting very emotional. I am overwhelmed.” pic.twitter.com/UrfnZ8d23M
— Open Source Intel (@Osint613) January 15, 2026
கிரீன்லாந்தை ராணுவ ரீதியாகக் கைப்பற்றும் எண்ணம் தங்களுக்கு இருப்பதாக ட்ரம்ப் நிர்வாகம் சூசகமாகத் தெரிவித்து வரும் நிலையில், அங்கு நிலவும் கடுமையான நெருக்கடி குறித்து விவரித்த அமைச்சர் விவியன், கடந்த சில தினங்கள் தங்களுக்கு மிகவும் சவாலாக இருந்ததாகக் கூறி கண் கலங்கினார்.
இதற்கிடையில், கிரீன்லாந்தில் ஐரோப்பிய நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டாலும், அந்தத் தீவைக் கைப்பற்றும் ட்ரம்ப்பின் திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று வெள்ளை மாளிகை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தரப்பு, தங்கள் நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்றும் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், ஒரு நேட்டோ உறுப்பு நாடு மற்றொரு உறுப்பு நாட்டின் பகுதியை ஆக்கிரமிக்க முயல்வது உலக அரசியலில் ஒரு பேரழிவாக அமையும் என்று எச்சரித்துள்ளார். தற்போதைய நிலையில், கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே பெரும் ராஜதந்திரப் போர் வெடித்துள்ளது.
