தாய்ப்பாசத்திற்கு மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், தென் ஆப்பிரிக்காவின் குரூகர் தேசிய பூங்காவில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானையை அதன் தாய் போராடி மீட்ட நெகிழ்ச்சியான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

வெள்ளம் கரைபுரண்டு ஓடும் ஆற்றில் தாயும் குட்டியும் கடக்க முயன்றபோது, நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் நிலைதடுமாறிய குட்டி யானை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இக்கட்டான அந்தச் சூழலில் சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் செயல்பட்ட தாய் யானை, தனது பலமான தும்பிக்கையால் குட்டியை இறுகப் பற்றி இழுத்துக் கரை சேர்த்தது.

ஒரு நொடி தாமதித்திருந்தாலும் குட்டியின் உயிர் ஆபத்தில் முடிந்திருக்கும் நிலையில், தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தாய் யானை காட்டிய அந்தப் பாசம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இயற்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் ஒரு தாயின் பாதுகாப்பு உணர்வு எல்லாவற்றையும் விட மேலானது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.