தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியில் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசையும் தி.மு.க. தலைமையையும் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும், “உதயநிதி பிறந்தநாளில் காணப்படும் அக்கறையை, மற்ற குழந்தைகளின் பாதுகாப்பிலும் அரசு காட்டவில்லை” என்றும் கூறினார். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சபாநாயகர் அப்பாவு நடுநிலையைக் கடைபிடிக்க வேண்டியவர் என்ற நிலையிலும், கவர்னர் குறித்து தவறான வார்த்தைகள் பயன்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என தமிழிசை கூறினார். கருத்து வேறுபாடு இருந்தால், நாகரீகமான முறையில் பேசுவது அரசியலின் நெறி எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றி கழகத்தில்’ இணைந்திருப்பது அவரின் தனிப்பட்ட அரசியல் நகர்வாகும் என்றும், அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான அவரின் சேர்க்கை அந்தக் கட்சிக்குப் பலம் சேர்க்கும் என்றும் தமிழிசை தெரிவித்தார். “அதேசமயம் அதிமுக–பா.ஜ.க. கூட்டணி பலமாகவே உள்ளது; வெற்றி நிச்சயம்” என்றார்.
செங்கோட்டையன் உட்பட பல அரசியல் மாற்றங்களுக்கு பா.ஜ.க. காரணம் என தி.மு.க. குற்றம் சாட்டுவது பொருந்தாது என்றும் அவர் கண்டித்தார். “அப்படியானால் உதயநிதியின் பிறந்தநாள் விழாவுக்கும் பா.ஜ.க. தான் காரணமா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
பா.ஜ.க.–அதிமுக கூட்டணி உறுதியானது என்றும், எதிர்க்கட்சிகளின் வாக்குச்சிதறலைத் தவிர்க்க அனைவரும் ஒரே வியூகத்தில் வர வேண்டும் எனவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். செங்கோட்டையன், விஜய், டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உட்பட அனைவரின் பொதுக் கடமை “தி.மு.க.வை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவது” என்றார். மேலும் புதுச்சேரியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்தது இரட்டை இஞ்சின் ஆட்சியால் சாத்தியமானது என்றும், அந்த ஆட்சி தொடர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
