திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நேற்று நிருபர்களிடம் பேசியதாவது: தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மட்டும் தான் மக்களின் உரிமையை காக்கும், மக்களுக்கு நியாயம் பெற்றுத்தரும் கட்சி. கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று நாம் கேட்கையில், இதில்மு.க. ஸ்டாலினுக்கு தயக்கம்? தற்போது திமுக அரசு, காவல்துறையின் மூலம் எங்கள் தொண்டர்களை பொய்யான வழக்குகளில் சிக்க வைத்து மிரட்டும் செயலில் ஈடுபட்டுள்ளது. இந்த அரசின் ஆட்சி நீண்ட நாட்கள் செல்லாது.
TVK தொண்டர்களை யாரும் கொடுமைப்படுத்த முடியாது. அதற்கெதிராக எங்கள் கட்சி வலியுறுத்தி குரல் கொடுக்கும். கோவையில் ரூ.1,635 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பெரிய மேம்பாலம் குறித்து பெருமைபடுவது வேடிக்கை. அந்தப் பாலம் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம். 4 ஆண்டுகளாக இறங்குதளம் அமைப்பதும், பெயிண்ட் அடிப்பதும் தவிர வேறு முன்னேற்றம் எதுவும் செய்யவில்லை. இப்போது அதில் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி, தங்களது சாதனையாகக் காட்டுவது நகைச்சுவை.
ஜனநாயகத்தை காக்க, இந்த சர்வாதிகார ஆட்சியை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மு.க. ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவது அவசியம். அதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி திறம்பட செய்து வருகிறார். அ.தி.மு.க. விரைவில் மாபெரும் கூட்டணியை அமைக்கும். ஏற்கனவே எங்கள் கூட்டத்தில் த.வெ.க.வினர் பங்கேற்றது, அந்த கூட்டணிக்கான ‘பிள்ளையார் சுழி’ என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிலிருந்தே பல விஷயங்கள் தெளிவாகின்றன,” என அவர் தெரிவித்தார்.
மேலும் கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக அதிமுகவினர் பேசும் நிலையில் சமீபத்தில் அதிமுக பிரச்சார கூட்டத்தின் போது தமிழக வெற்றிக்கழகத்தினர் கலந்து கொண்டதால் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார். இதன் பின்னணியில் தற்போது பொள்ளாச்சி ஜெயராமன் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மீது கை வைத்தால் அதிமுக முதல் ஆளாக குரல் கொடுக்கும் என்று கூறியது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது
