தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் அரசு பள்ளிகளில் நடத்தப்படுவதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அமைச்சர்த துரைமுருகனிடம் நிருபர்கள் கேட்டபோது ஒரு நாளில் ஒன்று ஆகி விடாது என்று பதில் அளித்தார். இதற்கு தற்போது அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள x பதிவில்,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர், சூரை, மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசுப்பள்ளிகளிலும், குமணந்தாங்கல் அரசுப்பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி மீண்டும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. ஏற்கனவே, திருச்சியிலும் இதே போல அரசுப்பள்ளியில் முகாம் நடத்தப்பட்டதை மாணவர்களும், பெற்றோரும் கண்டித்த நிலையில், தனது அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற துஷ்பிரயோகங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்களிடம், “ஒருநாளில் பாடத்தை எடுக்கப்போவதில்லை. மாணவர்களுக்கு எந்த இடையூறும் இல்லை” என கூச்சமின்றி பதிலளித்துள்ளார் அமைச்சர் திரு. துரைமுருகன். உங்களின் சுய விளம்பரத்திற்காக முகாம்களை நடத்தவேண்டும் என்றால் உங்கள் கட்சி அலுவலகங்களில் நடத்தலாமே அமைச்சரே. மீண்டும் மீண்டும் அரசுப்பள்ளிகளில் கைவைப்பது என்ன மாதிரியான மனநிலை?

ஏற்கனவே, திருபுவனத்தில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததை அனைவரும் அறிவார்கள். இதுதான் நீங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் லட்சணம். இப்படியிருக்க, ஏன் மாணவர்களின் கல்வியையும் சேர்த்து கெடுக்கிறீர்கள்? மாணவர்களின் கல்வியை தடுத்து அரசுப்பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்போடு வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

இதேபோன்று நயினார் நாகேசந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், திமுக தலைவர்களின் ஆணவம் அழிவிற்கான அறிகுறி! திமுக அரசின் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற விளம்பர நாடகத்திற்காக அரசுப்பள்ளிகளின் வகுப்பறைகள் பறிக்கப்பட்டு, பிள்ளைகள் கொளுத்தும் வெயிலில் வெளியே அமர வைக்கப்படுவது குறித்து நாம் பல முறை கண்டித்துள்ளோம். இந்நிலையில் இதுகுறித்த பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு, “ஒரு நாளில் அப்படி ஒன்றும் பாடம் நடக்கப்போவதில்லை, ஒரு நாளில் பிள்ளைகளின் படிப்பிற்கு எந்த இடையூறும் வரப்போவதில்லை” எனக் கூறி அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனையும் மாணவர்களின் கற்றல் திறனையும் ஒருசேர அவமானப்படுத்தியுள்ளார் திமுக அமைச்சர் திரு. @katpadidmk அவர்கள். ஆணவம் தெறிக்கும் திமுக அமைச்சரின் இந்தப் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

அரசுப்பள்ளிகள் ஒருநாள் செயல்படவில்லை எனில் ஒன்றும் குடிமுழுகிப் போகாது என்ற தொனியில் ஒரு அரசு அமைச்சர் பொதுவெளியில் பேசுகிறார் என்றால், ஏழை எளிய பிள்ளைகளின் கல்வியின் மீது திமுகவினருக்கு எத்தனை அலட்சியம் இருக்க வேண்டும்? எங்கள் பிள்ளைகளுக்கு ஒருநாள் கல்வி தேவையில்லை என முடிவு செய்வதற்குத் திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?

ஒன்றுக்கும் உதவாத ஆளும் அரசின் விளம்பரங்களுக்காக அரசுப்பள்ளிகளை ஒருநாள் முடக்கும் @arivalayam அரசு, பலர் குடியைக் கெடுக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு மணி நேரம் கூட விடுமுறை கொடுப்பதில்லையே ஏன்? இந்த டாஸ்மாக் மாடல் அரசுக்கு மது விற்பதைத் தவிர வேறு எதிலும் நாட்டமில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இந்த லட்சணத்தில் இவர்களுக்குக் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்ற விளம்பரம் வேறு என்று பதிவிட்டுள்ளார்.