கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
அந்த உத்தரவுக்கு எதிராக தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதோடு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரும் மனுவும் உட்பட மொத்தம் ஐந்து மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
இந்த மனுக்களை நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு விசாரித்தது.
தவெக சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சுப்பிரமணியம் மற்றும் அரியமா சுந்தரம் வாதங்களை முன்வைத்தனர். வாதத்தின் போது, கோபால் சுப்பிரமணியம் தெரிவித்ததாவது:
“பிரச்சார கூட்டத்திற்கு தேவையான அனைத்து அனுமதிகளும் பெற்றே நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால், அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘விஜய் சம்பவம் நடந்த உடனே தப்பித்துச் சென்றார்’ என்று கூறியுள்ளார். இந்தக் கூற்று முற்றிலும் தவறானது. காவல்துறை பாதுகாப்புடன், அதிகாரிகள் அறிவுறுத்திய வழியில்தான் விஜயின் வாகனம் வெளியேறியது.” அதன் பிறகு கரூர் சம்பவம் நடந்த பிறகு விஜய் போலீசார் கூறியதால் தான் உடனடியாக அந்த இடத்தில் இருந்து வெளியேறினார்.
மேலும், இந்த வழக்கில் விஜய் அல்லது தவெக எதிர்மனுதாரராக கூட சேர்க்கப்படவில்லை என்றும், “இதைப் பொருட்படுத்தாமல், சென்னை உயர்நீதிமன்றம் விஜயை நேரடியாக விமர்சித்து, ‘இவர் எப்படிப்பட்ட தலைவராக இருக்கிறார்’ என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளது,” என்று தவெக தரப்பு குற்றம் சாட்டியது.
விசாரணை நடைபெறும் போதே, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். “இந்த வழக்கு மதுரைக் கிளையின் விசாரணை வரம்புக்குள் வரும் ஒன்று. அப்படி இருக்கையில், சென்னையில் உள்ள பிரதான கிளையில் எப்படி விசாரணைக்கு எடுக்கப்பட்டது?” பிரச்சாரம் மற்றும் ரோடு ஷோ வழிகாட்டுதல்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு பதியப்பட்டது எப்படி.? விஜய் பற்றிய விமர்சனம் ஏன்? தேர்தல் பிரச்சார வழிமுறை தொடர்பான வழக்கு சாரணையின் போது விஜயை பற்றி விமர்சித்தது ஏன் என உச்சநீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியது.
இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம்,
“விசாரணை வரம்புக்கு வெளியே உள்ள வழக்கை எடுத்துக்கொள்வதற்கு, தலைமை நீதிபதியின் அனுமதி அவசியம். ஆனால் இந்த வழக்கில் அத்தகைய அனுமதி எடுக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை,”என்று விளக்கமளித்தார்.
தவெக தரப்பு மேலும்,“சம்பவ இடத்தில் சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தபோது ஏற்பட்ட நெரிசல் காட்சிகள் இருந்தபோதிலும், அதனை ஆதாரமாக வைத்து எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அதே காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விஜயை விமர்சித்துள்ளது தவறு,” என்று வாதித்தது.
மேலும் உச்சநீதிமன்றம் இருதரப்பின் வாதங்களையும் கேட்டது. வழக்கின் மேலதிக விசாரணை அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
