கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்கு தொடர்பான வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. வழக்கை நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் தவெக சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பல்வேறு வாதங்களை முன்வைத்தனர்.
அவர்கள் தெரிவித்ததாவது: “விஜய் சம்பவம் நடந்த உடனே தப்பித்துச் சென்றார் என அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியது முற்றிலும் தவறானது. விஜய் காவல்துறை பாதுகாப்புடன், அதிகாரிகள் அறிவுறுத்திய வழியில்தான் அந்த இடத்திலிருந்து வெளியேறினார். அவர் தப்பி ஓடவில்லை.”
மேலும், “விஜய் எதிர்மனுதாரராக கூட சேர்க்கப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அவரை விமர்சித்து கருத்து தெரிவித்தது பொருத்தமற்றது,” என்றும் தவெக தரப்பு தெரிவித்தது.
அத்துடன், பிரச்சாரத்திற்காக காவல்துறை பல்வேறு நிபந்தனைகள் விதித்தது. அவை அனைத்தையும் பின்பற்றியே கூட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க கட்சி நிர்வாகிகளை காவல்துறை அனுமதிக்கவில்லை,” என்றும் தெரிவித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராக தவெக தரப்பு,
“எங்களுக்கு மாநில அரசின் மீது நம்பிக்கை இல்லை. அதனால், அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவை ரத்து செய்ய வேண்டும்,” என்று கோரிக்கை வைத்தது.
இதற்குப் பதிலளித்த தமிழக அரசு தரப்பு, “அஸ்ரா கார்க் திறமையான அதிகாரி; சிறப்பு புலனாய்வுக் குழு மீது எந்த சந்தேகமும் இருக்க வேண்டிய அவசியமில்லை,” என்று வாதிட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள், “அந்த குழுவில் உள்ளவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தானே?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், தவெக சார்பில், “இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் புதிய விசாரணைக் குழு அமைக்க வேண்டும், என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் உச்சநீதிமன்றம் மதுரை கிளை விசாரிக்க வேண்டிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக விசாரித்தது ஏன்.? இரு நீதிமன்றமும் வெவ்வேறு கருத்துகளை கூறியது எதற்காக. விஜய் பற்றிய விமர்சனம் ஏன். என அரசு தரப்பிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
