தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றம் விஜயை விமர்சித்திருந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது. இதற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றமே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் பிறகு வழக்கில் விஜய் மற்றும் அவருடைய கட்சி எதிர்மனுதாரராக இல்லாத நிலையில் உயர்நீதிமன்றம் விஜயை எப்படிப்பட்ட தலைவர் என பல விமர்சனங்களை முன்வைத்ததாகவும் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதுரை கிளை விசாரிக்க வேண்டிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் தானாக விசாரித்தது ஏன்.?
மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்தது ஏன். பிரச்சாரம் மற்றும் ரோடு ஷோ போன்ற விதிமுறைகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்காக பதியப்பட்டது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் 41 பேர் உயிரிழந்ததால் கிரிமினல் வழக்காக பதியப்பட்டதாக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதன் பிறகு சிறப்பு புலனாய்வு குழு நம்பகமானது எனவும் ஐஜி அஸ்ரா கார்க் சிறந்த அதிகாரி எனவும் தமிழ்நாடு தரப்பு வாதத்தை முன் வைத்த நிலையில் அவர்கள் அனைவருமே தமிழ்நாட்டை சேர்ந்த அதிகாரிகள் தானே என உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கை தனி நீதிபதி விசாரித்தது தவறு எனக் கூறிய நீதிமன்றம் மதுரை கிளை விசாரிக்க வேண்டிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக விசாரித்தது ஏன் எனவும் தலைமை நீதிபதியின் அனுமதி இதற்கு கிடைத்ததா எனவும் கேள்வி எழுப்பிய நிலையில் தவெக தரப்பு தலைமை நீதிபதி அனுமதி கொடுத்தாரா என்பது பற்றி இதுவரை தகவல் வெளியாகவில்லை என்றது.
அதன் பிறகு கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சென்று பார்க்கவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பு வாதத்தை முன்வைத்த நிலையில் விஜய் சென்று பார்த்தாரா இல்லையா என்பது இப்போது தேவையில்லாதது என உச்ச நீதிமன்றம் கூறியது.
மேலும் விஜய் சரியான நேரத்திற்கு வராததே அனைத்திற்கும் காரணம் என தமிழ்நாடு அரசு தரப்பு வாதத்தை முன்வைத்த நிலையில் அடுத்த அமர்வுக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
