இந்தியாவில் உணவு மற்றும் பொருள் விநியோகத் துறையில் உள்ள கிக் தொழிலாளர்களின் ஊதியம் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிளிங்கிட் விநியோக ஊழியரின் காணொலி. தாப்ளியால் ஜி என்ற அந்த ஊழியர், தனது இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்றில், 15 மணி நேரப் பணிநாளில், 28 விநியோகங்களை முடித்த பிறகு 763 ரூபாய் மட்டுமே சம்பாதித்ததாக விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.

இதில், கடைசி விநியோகத்திற்குப் 15 ரூபாய் 83 பைசா மட்டுமே பெற்றதாகவும், சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு சுமார் 52 ரூபாய் மட்டுமே ஈட்டுவதாகவும் அவர் பிளிங்கிட் செயலியின் திரைப் பதிவுகளுடன் நிரூபித்துள்ளார். கிக் வேலையின் நிலையற்ற தன்மையைப் பற்றி விவரித்த அவர், அதிக ஆர்டர்கள் வரும் நாட்களில் 1600 முதல் 2000 ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும் என்றும், தேவை குறைவாக உள்ள நாட்களில் 1000 ரூபாய் சம்பாதிப்பது கூடக் கடினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த காணொலி ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் மற்றும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான கருத்துகளைப் பெற்ற நிலையில், விநியோக ஊழியர்களின் ஊதியம் மற்றும் பாதுகாப்பு குறித்துப் பலரும் கவலை தெரிவித்தனர். இந்தச் சூழலை, “சந்தேகமின்றி இது மலிவான மனித உழைப்புச் சுரண்டல்” என்றும், “ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் கொடுங்கள்” என்றும் வலைதளவாசிகள் பிளிங்கிட் நிறுவனத்தை விமர்சித்துள்ளனர்.