இந்தியாவின் முன்னணி கண் கண்ணாடி விற்பனை நிறுவனமான லென்ஸ்கார்ட், தனது ஊழியர்களுக்கான ஆடை மற்றும் அலங்கார விதிகளில் மத அடையாளங்களுக்குப் பாகுபாடு காட்டுவதாக எழுந்துள்ள சர்ச்சை சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.
பிரபல எழுத்தாளர் ஷெபாலி வைத்யா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் ‘ஸ்டைல் கைடு’ ஆவணத்தின் 11-வது பக்கம், இந்த சர்ச்சைக்கு வித்திட்டது. அந்த ஆவணத்தில், பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெற்றியில் திலகம், பொட்டு (Bindi) அல்லது கையில் காப்பு கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
Hi, all. I’ve been seeing an inaccurate policy document going viral about Lenskart.
I want to speak directly that this document does not reflect our present guidelines.
Our policy has no restrictions on any form of religious expression, including bindi and tilak, and we…
— Peyush Bansal (@peyushbansal) April 15, 2026
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில், இந்து அடையாளங்களுக்குத் தடையா?” எனக் கேள்வி எழுப்பி #BoycottLenskart என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர். பலர் லென்ஸ்கார்ட் பொருட்களை இனி வாங்கப்போவதில்லை என்றும் ஆவேசமாகப் பதிவிட்டனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, லென்ஸ்கார்ட் நிறுவனர் பியூஷ் பன்சால் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆவணம் மிகவும் பழமையானது மற்றும் தவறானது. எங்களது தற்போதைய கொள்கையின்படி, ஊழியர்கள் திலகம், பொட்டு உள்ளிட்ட எந்தவொரு மத அடையாளங்களையும் அணிவதற்கு எந்தத் தடையும் இல்லை.
லென்ஸ்கார்ட் இந்தியாவிற்கான நிறுவனம். இங்கே பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையைத் தடையின்றி வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் தவறான புரிதலுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். பியூஷ் பன்சாலிக் இந்த அதிரடி விளக்கத்திற்குப் பின் இந்தப் பதற்றம் சற்று தணிந்துள்ளது.
