இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பாட்டீல், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ (மகளிர் இடஒதுக்கீடு சட்டம்) அமலாக்கத்தைப் பாராட்டியுள்ளார். இந்தச் சட்டத் திருத்தம் இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, சட்டப் பேரவைகளில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யும் ஒரு மைல்கல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2029 பொதுத் தேர்தலுக்கு முன்பே இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வருவதை உறுதி செய்ய, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இதனைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இச்சூழ்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரான பிரதிபா பாட்டீல், கட்சிப் பாகுபாடின்றி மத்திய அரசின் இந்த நடவடிக்கையைத் ‘மக்களாட்சியின் மகத்தான சீர்திருத்தம்’ எனப் பாராட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
