மும்பை திண்டோஷி பகுதியில், நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறி பெண்களை நள்ளிரவில் வரவழைத்துப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ‘ஜிம் ட்ரைனர்’ போலி சாமியார் ரிதம் பாஞ்சால் (எ) மான்டி பாஞ்சால் (37) என்பவரைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜிம் ட்ரைனராக இருந்த இவர், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கச் சாமியார் வேடமிட்டு மலாடு பகுதியில் ‘தர்பார்’ நடத்தி வந்துள்ளார். தன் மீது தேவி இறங்குவதாகவும், தீராத நோய்களைக் குணப்படுத்துவேன் என்றும் கூறி அப்பாவி மக்களை நம்ப வைத்துள்ளார்.
குறிப்பாக, குழந்தை இல்லாத பெண்களைக் குறிவைத்து நள்ளிரவில் வரவழைக்கும் இவர், பூஜையின் பெயரால் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். பேய் ஓட்டுவதாகக் கூறி வாயில் சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகையை ஊதுவது, பரிகாரத்திற்காக விலை உயர்ந்த மதுபானங்கள், சிகரெட், உயிருள்ள கோழி மற்றும் ஆட்டு ஈரல் ஆகியவற்றைக் கேட்டு பக்தர்களைச் சுரண்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து 60-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர். பாஜக முன்னாள் கவுன்சிலர் சித்தார்த் சர்மாவின் முயற்சியால் இந்த போலி சாமியாரின் முகம் கிழிந்துள்ளது. தற்போது இவரைச் சிறையில் அடைத்துள்ள போலீஸார், இதன் பின்னணியில் உள்ள அரசியல் தொடர்புகள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
