முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் வாயிலாக மதுரைக்கு இன்று காலை 11 மணியளவில் வந்தடைந்தார். இதனிடையே விமானத்தில் உடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசி உள்ளார். விமானத்திலிருந்து இறங்கி பஸ்ஸில் வந்தபோது “துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியுடன் பயணிக்கிறேன். துரோகத்தின் அடையாளம் சின்னம்மா சசிகலாவுக்கு துரோகம் செய்தவர். 10.5% இடஒதுக்கீடு வழங்கி தென்மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர்” என அந்நபர் பேசும் வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் சிங்கப்பூரில் இருந்து சென்னை வழியாக மதுரை விமான நிலையத்திற்கு வந்த அவர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எம்.வையாபுரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் மகன் ராஜேஸ்வரன்(42) என்பது தெரியவந்துள்ளது. விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்கு வந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். இதன் காரணமாக மதுரை விமானம் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.