தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி செய்திகள் வெளியான நிலையில் தமிழக காவல்துறை விளக்கம் கொடுத்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் போலி செய்திகளை பரப்பிய நபர்களை தேடி தமிழக போலீசார் டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களுக்கு சென்றனர். இந்நிலையில் தற்போது பீகாரைச் சேர்ந்த அமன் குமார் என்பவரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுவரை போலி வீடியோ வெளியிட்ட வழக்கில் அமன் குமார், ராகேஷ் ரஞ்சன், உமேஷ் மகாடோ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் வீடியோக்களை பரப்பியது தொடர்பாக 42 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் இருவரை உடனடியாக கைது செய்ய போலீசார் நீதிமன்றத்தை அனுகியுள்ளதாகவும் தற்போது தெரிவித்துள்ளனர். மேலும் பீகாரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வட மாநில தொழிலாளர்களை தமிழகத்தில் தாக்குவது போன்று இருவர் போலி வீடியோக்களை எடுத்ததாக ராகேஷ் ராஜன் கூறியுள்ளதாக பீகார் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கொண்ட குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.