தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் ஆடம்பரப் பகுதியான ஜூப்ளி ஹில்ஸில் நேற்று இரவு நடந்த போக்குவரத்துச் சோதனையின்போது, போலீஸாரை அதிரவைத்த ஒரு சினிமா பாணி மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அபராதங்களில் இருந்து தப்பிக்கத் தனது சொகுசு பிஎம்டபிள்யூ காரில் ஒரு நபர் செய்திருந்த ‘கைவரிசை’ அதிகாரிகளை வாயடைக்கச் செய்துள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த அந்த நபரின் காரை நிறுத்திச் சோதனையிட்டபோது, அந்த காரில் டெல்லி மற்றும் தெலுங்கானா என இரண்டு மாநிலங்களின் பதிவு எண்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகள் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

 

இது ஏதோ சாதாரண நம்பர் பிளேட் மாற்றம் அல்ல. காரின் உள்ளே இருக்கும் ஒரு சிறிய பட்டனை அழுத்தினால் போதும், நொடிப் பொழுதில் ஒரு நம்பர் பிளேட் மறைந்து மற்றொரு நம்பர் பிளேட் தானாகவே தோன்றும் வகையில் அதிநவீனக் கருவி பொருத்தப்பட்டிருந்தது.

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போன்ற இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஐதராபாத்தில் ஒருவர் பிடிபடுவது இதுவே முதல்முறை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அந்த சொகுசு காரைப் பறிமுதல் செய்த போலீஸார், ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டனை அழுத்தினால் நம்பர் பிளேட் மாறும் இந்தக் காரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.