உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் ஒரே பெண்ணைத் திருமணம் செய்ய இரண்டு மணமகன்கள் தங்கள் உறவினர்களுடன் ஒரே நேரத்தில் மண்டபத்திற்கு வந்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. முதலில் முராதாபாத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் அந்தப் பெண்ணிற்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், திருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆத்திரமடைந்த மணப்பெண் வீட்டார், அந்தத் திருமணத்தை ரத்து செய்தனர். சமூகத்தில் அவப்பெயர் ஏற்படும் என்று அஞ்சி, அதே திருமண தேதியில் சம்பல் பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருடன் அவசரமாகப் பெண்ணிற்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
மேலும் திருமணத்தன்று முராதாபாத் மற்றும் சம்பல் ஆகிய இரு ஊர்களில் இருந்தும் ஒரே நேரத்தில் இரண்டு மணமகன்கள் செண்டா மேளங்களுடன் மண்டபத்தின் வாசலில் வந்து நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணப்பெண்ணுக்கு இரண்டு மணமகன்கள் வந்ததைப் பார்த்து உறவினர்களிடையே மோதல் ஏற்பட்டு, இறுதியில் போலீசார் தலையிட்டனர்.
இந்நிலையில் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மணப்பெண் தான் இரண்டாவதாக நிச்சயிக்கப்பட்ட சம்பல் இளைஞரையே திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாகக் கூறினார். இதனையடுத்து போலீசாரின் முன்னிலையில் சம்பல் இளைஞருடன் திருமணம் இனிதே நடைபெற்றது, அதே நேரத்தில் முதலில் நிச்சயிக்கப்பட்ட முராதாபாத் இளைஞர் ஏமாற்றத்துடன் தனது ஊருக்குத் திரும்பிச் சென்றார்.
