மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் இருந்து மிகவும் குறைந்த விலைக்குக் கொண்டுவரப்பட்ட போலி கள்ளச்சாராயத்தைக் குடித்ததே இந்த விபரீத உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கள்ளச்சாராயம் விநியோகிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட 31 கிராமங்களில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். ​பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிரப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சட்டவிரோதக் கள்ளச்சாராய விநியோகத்தைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும், கள்ளச்சாராய வியாபாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சாகர் மாவட்டத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.