பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களிடம் இருந்து அவர்களின் செல்போன்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) திடீரெனப் பெற்றுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) விதிமுறைகளின்படி போட்டிகள் நடைபெறும் போது மைதானத்திற்குள்ளும், வீரர்களின் ஓய்வறையான ‘டிரெஸ்ஸிங் ரூமிலும்’ மட்டுமே செல்போன்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பது வழக்கம்.
ஆனால், அதையும் தாண்டி தங்கும் விடுதி அறைகளிலும் வீரர்களிடமிருந்து செல்போன்கள் பெறப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஏதேனும் மேட்ச் ஃபிக்சிங் (Match-fixing) புகார்கள் எழுந்ததன் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
இருப்பினும், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்ததால், வீரர்கள் போட்டியில் முழு கவனத்தையும் செலுத்துவதற்காகவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. பிசிபி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுநர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
