டிஜிட்டல் தளத்தில் தனித்துவமான படைப்புகள் மூலம் தொடர்ந்து தாக்கங்களை ஏற்படுத்தி வரும் பிரபல ஊடகவியலாளர் மற்றும் தொகுப்பாளர் கோபிநாத்தின் ‘கோபிநாத் அஃபீஷியல்’ யூடியூப் சேனலுக்கு ‘டிஜிட்டல் விருதுகள் 2026’ விழாவில். சமூகத்தின் நுட்பமான பிரச்னைகள், உளவியல் மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த விஷயங்களை ஆழமாகவும் நேர்த்தியாகவும் பேசிவரும் இவருக்கு, பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி இந்த விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளார். இந்த விழாவில் கோபிநாத்தின் அண்ணன் சர்ப்ரைஸாக மேடைக்கு வந்து, அவர் எட்டாம் வகுப்பு படிக்கும்போது கேட்ட ஃபவுண்டன் பேனரைப் பரிசாக வழங்கி நிகழ்வை நெகிழ்ச்சியடையச் செய்தார்.

விருதைப் பெற்றுக்கொண்டு மேடையில் பேசிய கோபிநாத், வாழ்க்கையில் மற்றவர்களைத் தோற்கடிக்க உங்கள் சக்தியை வீணடிக்காமல், உங்களை மேம்படுத்திக்கொள்ளப் பயன்படுத்துங்கள் என்று இளம் தலைமுறைக்கு அறிவுரை வழங்கினார் . மேலும், கிரிக்கெட் வீரர் தோனியைப் பார்த்துத் தான் மிகவும் வியப்பதாகவும், “எப்படிய்யா இப்படி இருக்க…” என்று அவரிடம் கேட்க தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவரைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜா மற்றும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட ஆளுமைகள் குறித்தும் தனது சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்து அரங்கத்தில் இருந்தவர்களை ஈர்த்தார்.

இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அவர் பேசிய சுவாரஸ்யமான தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் தன்னிடம் ஒருமுறை நகைச்சுவையாகப் பேட்டி தர மாட்டேன் என்று கூறிய நிகழ்வை நினைவுகூர்ந்த கோபிநாத், “எல்லா சத்தியமும் பலிக்காது தலைவரே… நடந்தால் சந்தோஷம், நடக்கும் என்று நம்புவோம்” என்று கலகலப்பாகத் தெரிவித்தார். ஊடகத்துறையில் பல வருடங்களாகத் தனது தனித்துவமான குரலாலும் பேச்சாலும் கோடிக்கணக்கான மக்களின் மனதைக் கவர்ந்து வரும் கோபிநாத்திற்குத் தற்போது கிடைத்துள்ள இந்த விருது, அவரது நீண்ட காலப் பயணம் மற்றும் உழைப்புக்குக் கிடைத்த மேலும் ஒரு மகுடமாக அமைந்துள்ளது.