தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் அதிமுகவில் நகராட்சித் தலைவர் மற்றும் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு பொறுப்புகளில் இருந்த தன்னைத் திட்டமிட்டுத் தூக்கி எறிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடரத் தான் ஆதரவு அளித்ததுதான் தான் செய்த மிகப்பெரிய தவறு என்று அவர் உருக்கமுடன் தெரிவித்தார். ஆரம்பத்திலிருந்தே தன்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட எடப்பாடி பழனிசாமி முயன்று வந்ததாகவும் இந்த உலகில் நன்றிகெட்ட அரசியல்வாதி யாராவது இருந்தால் அது எடப்பாடி பழனிசாமிதான் என்றும் அவர் மிகக் கடுமையாகச் சாடினார்.

தற்போது தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதைச் சுட்டிக்காட்டிய ஓ பன்னீர்செல்வம் ஒரு காலத்தில் டெல்லியில் இருப்பவர்கள் கூட்டணி குறித்துப் பேசத் தமிழகம் தேடி வருவார்கள் என்று நினைவு கூர்ந்தார். ஆனால் இன்று அதிமுகவின் நிலைமை அவ்வாறு இல்லை என்றும் இனி வரும் காலங்களில் அதிமுக என்ற கட்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது என்றும் அவர் கூறினார்.

வரும் தேர்தல்களில் உதயசூரியன் சின்னமே தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நிலையைத் தொண்டர்கள் உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமரிசித்துப் பேசிய ஓ பன்னீர்செல்வத்தின் இந்த உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.