“பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருவோம்” என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது 2026 தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றப் புதிய நாடகத்தை ஆடுவதாக எடப்பாடி பழனிசாமி (EPS) குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த ‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்’ (UPS) பெயரையும், உருவத்தையும் மாற்றி ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ எனப் பெயரிட்டு ஸ்டாலின் அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது என்று அவர் விமர்சித்துள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களின் பங்களிப்பு எதுவும் இருக்காது; ஆனால் இந்த புதிய திட்டத்தில் மாதம்தோறும் 10 சதவீதம் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும்.

மேலும், பழைய திட்டத்தில் உள்ளது போல ஊதியக்குழு பரிந்துரையின்படி ஓய்வூதியத் தொகை உயர்த்தி வழங்கப்படாது என்பதால் இது அரசு ஊழியர்களுக்கு எந்தப் பலனும் தராது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“புதிய மொந்தையில் பழைய கள்” என்பது போல மத்திய அரசின் திட்டத்தையே திமுக அரசு தனது மாடல் திட்டம் என்று மார்தட்டிக்கொள்வதாகவும், இதற்குத் துணை போகும் சங்க நிர்வாகிகள் ஒருநாள் உண்மையை உணர்வார்கள் என்றும், வரும் தேர்தலில் இதற்கு அரசு ஊழியர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.