ஒரு காலத்தில் ஹிஜாப் அணிந்த பெண் இந்த நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதிஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சித் தலைவரும், ஹைதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநில உள்ளாட்சித் தேர்தல் வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சோலாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ஓவைசி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சாசனம் என்பது மிகவும் உன்னதமானது. இது ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூக மக்களுக்கும் சமமான உரிமையையும், அந்தஸ்தையும் வழங்குகிறது. ஆனால், நமது அண்டை நாடான பாகிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டம் அப்படியல்ல. அங்கு நாட்டின் உயரிய அரசியலமைப்பு பதவிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதுவே இந்திய ஜனநாயகத்திற்கும், பிற நாடுகளுக்கும் உள்ள வேறுபாடு.

பெண்கள் முன்னேற்றம் மற்றும் அவர்களது உரிமை குறித்துப் பேசிய அவர், “எதிர்காலத்தில் ஒரு நாள் ஹிஜாப் அணிந்த பெண் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்பார். அந்தச் சரித்திர நிகழ்வு நடக்கும்போது நான் உயிருடன் இருப்பேனா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அது நிச்சயம் நடக்கும்” என உருக்கமாகத் தெரிவித்தார். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் ஏஐஎம்ஐஎம் கட்சி தீவிரமாகப் போட்டியிடும் நிலையில், ஓவைசியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.