திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இந்தச் சட்டமன்றத் தேர்தலில் எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முறைப்படி வெளியிட்டார்.

அதில் கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார் கோயில் தனித் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் தமிழகத்தின் மாநில அரசியலில் தற்பொழுது அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் சூழலில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதால் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டே தாம் நேரடியாகத் தேர்தலில் களம் இறங்குவதாக அவர் விளக்கம் அளித்தார்.

வேட்பாளர் தேர்வில் சிலருக்கு வாய்ப்பு வழங்க முடியாதது வருத்தம் அளிப்பதாகக் கூறிய அவர் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.