சமூக வலைதளங்களில் ‘லைக்’குகளை அள்ள வேண்டும் என்ற போதை சில இளைஞர்களை விபரீதத்தின் விளிம்பிற்கே கொண்டு செல்கிறது. அந்த வகையில், டெல்லியின் நியூ உஸ்மான்பூர் பகுதியில் துஷார் புனியா (22) என்ற இளைஞர், தனது இருசக்கர வாகனத்தில் பறந்து கொண்டே, சாலையில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் டிடிசி (DTC) பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களின் கதவுகளைத் திடீரெனத் திறந்துவிட்டு சாகசம் செய்துள்ளார்.

இந்த ஆபத்தான செயலை அவரது நண்பர் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாகப் பதிவிட, அது காட்டுத்தீயாகப் பரவி மக்களின் கடும் கண்டனத்தைப் பெற்றது.

இந்த வீடியோ டெல்லி போலீசாரின் கவனத்திற்குச் செல்ல, அவர்கள் அதிரடி ஆக்ஷனில் இறங்கினர். வாலிபரின் பைக்கில் ‘நம்பர் பிளேட்’ (Number Plate) இல்லாததால், அவரை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.

இருப்பினும், சிசிடிவி காட்சிகளை அலசி ஆராய்ந்த போலீசார், கஜூரி காஸ் பகுதியில் வசித்து வந்த துஷார் புனியாவை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

விசாரணையில், தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காகவே பைக்கின் நம்பர் பிளேட்டை அவர் கழற்றி வைத்திருந்தது தெரியவந்தது.

“ரீல்ஸ் எடுக்கிறேன் பேர்வழி என மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என டெல்லி போலீசார் எச்சரித்துள்ளனர்.