வீடுகளில் பொருத்தப்படும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலமாக வெளிவந்துள்ள சில அதிர்ச்சிகரமான உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து மருத்துவ உலகம் தற்பொழுது ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. உலகளவில் குழந்தைகளின் மரணத்திற்கு மூச்சுத்திணறல் மற்றும் திடீர் மரணங்களே (Suffocation and Choking) முதன்மைக் காரணமாக இருக்கும் வேளையில், அதற்குப் பின்னால் இருக்கும் ஒரு சத்தமில்லாத ஆபத்தைப் பெற்றோர்கள் உணர்வதே இல்லை என்று மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

பெற்றோர்கள் தங்களது படுக்கையறையிலோ அல்லது தொட்டிலிலோ கனமான போர்வைகள், துண்டுகள் (Towels), மற்றும் மெத்தென்ற தலைகணைகளைத் தேவையற்றுப் போட்டு வைப்பதுதான் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது. ​இந்த ஆபத்தின் பின்னணியில் இருக்கும் அறிவியல் என்னவென்றால், பச்சிளம் குழந்தைகளின் மூச்சுக்குழாய் மிகவும் சிறியதாக இருக்கும். நாம் கவனக்குறைவாகப் போட்டு வைக்கும் தளர்வான துணிகளோ அல்லது போர்வைகளோ, குழந்தை புரண்டு படுக்கும் போதோ அல்லது கைகளை அசைக்கும் போதோ அதன் முகத்தை மூடிவிட்டால், சில நொடிகளிலேயே மூச்சுக்குழாயைச் சத்தமில்லாமல் அடைத்துவிடும்.

குழந்தை அழக்கூட முடியாமல், துளி சத்தம் கூட வராமல் இந்த விபரீதம் நடந்து முடிந்துவிடும் என்பதுதான் இதில் இருக்கும் மிகப்பெரிய கொடுமை. ஆனால், அதிர்ஷ்டவசமாக 99 சதவீத இத்தகைய விபத்துகளைப் பெற்றோர்களின் சிறு விழிப்புணர்வு மூலம் முற்றிலும் தடுத்து நிறுத்த முடியும் என்று மருத்துவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். இதற்கான பொன்விதி (Golden Rule) என்னவென்றால், குழந்தை தூங்கும் இடம் எப்போதும் முற்றிலும் காலியாக இருக்க வேண்டும்; அங்குத் தேவையற்ற போர்வைகளோ, துண்டுகளோ, பொம்மைகளோ இருக்கவே கூடாது. சில நொடிகள் நாம் நம் படுக்கையைச் சோதிப்பது நம் குழந்தையின் ஆயுளைக் காக்கும்.