கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம், ராணிபென்னூர் தாலுகாவில் உள்ள ககோலா கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபா (30). கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலையில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக இவரை ஹாவேரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். ஆனால், அங்குள்ள பிரசவ அறையில் படுக்கை வசதி பற்றாக்குறையாக இருந்ததால், ரூபா நடைபாதையில் அமர வைக்கப்பட்டிருந்தார். நேரம் செல்லச் செல்ல ரூபாவுக்குப் பிரசவ வலி கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியது. இருப்பினும், ஆச்சரியப்படும் வகையில் எந்த டாக்டரோ, நர்ஸோ அவரைச் சோதனை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

கடுமையான வலியால் துடித்த ரூபா, இருக்கையில் அமர முடியாமல் எழுந்து வலியில் துடித்தபடியே நடைபாதையில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். அப்போது, அவர் நடந்து கொண்டிருந்தபோதே திடீரெனக் குழந்தை பிறந்தது. குழந்தை தரையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்ததால், அது உடனே இறந்துவிட்டது.

ரூபா கடுமையான வலியால் அலறித் துடித்தபோதும் டாக்டர்கள் அலட்சியமாக இருந்ததாகவும், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததுதான் குழந்தை இறப்புக்குக் காரணம் எனவும் குற்றம் சாட்டி ரூபாவின் குடும்பத்தினரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். பின்னர், போலீசாரும், ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரும் விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.