திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மாதவப் பெருமாள் கோவில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் குமரகுடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அனைவருமே விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். அதன்பிறகு இந்த கிராமத்தில் போதிய அளவுக்கு அத்தியாவசிய தேவைகள் எதுவும் இல்லாததோடு சாலை வசதி, போக்குவரத்து வசதி போன்றவைகளும் கிடையாது. இதனால் ஏதேனும் அவசர தேவை என்றால் கிராம மக்கள் 2 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே செல்ல வேண்டிய நிலை தான் இருக்கிறது.

இந்நிலையில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத குமரகுடி கிராமத்தை தற்போது மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அடிப்படை வசதிகள் கூட இல்லாத எங்கள் கிராமத்தை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் போராட்டம் நடத்தியும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.

அதன் பிறகு தார் சாலை அமைக்கும் பணியில் 3 மாத காலமாக மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை சாலைகள் சீரமைக்கப்படவில்லை. அதோடு கிராமத்தில் சாலையை ஒட்டியுள்ள மண்ணை இழுத்து சாலையின் உயர்மட்ட அளவிற்கு போட்டுள்ளனர். இதனால் சாலைக்கும் வாய்க்காலுக்கும் இடையே கட்டப்பட்ட தடுப்பு அரண் இடிந்து விழுகிறது. மேலும் இடிந்து விழுந்துள்ள கால்வாய் பணிகளை சீரமைத்துக் கொடுப்பதோடு சாலை பணிகளையும் முழுமையாக முடிக்க வேண்டும் என குமரகுடி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.