ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் டெக்கலி பகுதியைச் சேர்ந்த காந்தாராவ்வின் அக்காள் மகன் உமாசங்கர் (25) என்பவர், தன்னைத் திருமணம் செய்து வைக்க மறுத்த ஆத்திரத்தில், தனது மாமன் மகளான பவித்ராவை (19)க் கத்தியால் குத்திப் படுகொலை செய்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வரும் உமாசங்கருக்கும், பவித்ராவுக்கும் திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தினரும் முதலில் முடிவு செய்திருந்தனர்.
ஆனால், உமாசங்கருக்குக் குடிப்பழக்கம் இருந்ததால், காந்தாராவ் திருமணத்திற்கு மறுத்துள்ளார். மேலும், தன் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த உமாசங்கர், காந்தாராவ்வின் வீட்டிற்குச் சென்றுத் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துப் பவித்ராவின் கழுத்தில் பலமாகக் குத்திவிட்டுத் தப்பியோடினார்.
படுகாயமடைந்த பவித்ரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தப்பியோடிய உமாசங்கரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
