இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, யுனெஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய (Intangible Cultural Heritage) பட்டியலில் இன்று (நவம்பர் 10) அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்று வரும் யுனெஸ்கோவின் முக்கிய கூட்டத்தில் இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அருவமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் (ICH) 20வது மாநாடு தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டை இந்தியா நடத்துவது இதுவே முதல்முறையாகும். டிசம்பர் 8ஆம் தேதி ஆரம்பமான இந்த குழு அமர்வு டிசம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலக நாடுகள் பங்கேற்று வருகின்றன.
தீபாவளிக்கு முன்பே, இந்தியாவின் பல மரபுகள் யுனெஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளன. கும்பமேளா, கொல்கத்தாவின் துர்கா பூஜை, குஜராத்தின் கர்பா நடனம், யோகா, வேத மந்திரங்களின் பாரம்பரியம், ‘ராமாயண’ காவியத்தின் பாரம்பரிய மேடை நிகழ்ச்சியான ராம்லீலா போன்ற 15 பாரம்பரியங்கள் தற்போது இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இதனுடன், தீபாவளியும் இணைந்ததால் இந்தியாவின் கலாச்சார மரபுகளுக்கு சர்வதேச அளவில் மேலும் ஒரு பெருமை சேர்த்துள்ளது.
