மகாராஷ்டிராவில் உள்ள சோலாப்பூர்-துலே தேசிய நெடுஞ்சாலையில் (ஹைவே) கொள்ளையர்கள் சினிமாவை மிஞ்சும் அளவுக்குத் துணிகரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ‘தூம்’ திரைப்பட சாகசங்களைப் போல, மோட்டார் சைக்கிள்களில் வேகமாக வரும் கொள்ளையர்கள், ஓடும் பேருந்துகளைத் துரத்திப் பயணிகளிடமிருந்து பொருட்களைப் பறித்துச் சென்றுள்ளனர். சமீபத்தில், திருமண ஊர்வலம் சென்ற ஒரு வோல்வோ பேருந்தில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானது.

அதில், கொள்ளையர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி, ஓடும் பேருந்தின் லக்கேஜ் பெட்டியைத் திறந்து, பல சூட்கேஸ்களைச் சாலையில் வீசியெறிந்துவிட்டுத் தப்பிச் செல்வது பதிவாகியிருந்தது. ​இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தால், பீட் மாவட்ட காவல்துறை உடனடியாக விழித்துக்கொண்டு ரோந்துகளை அதிகரித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காகச் சில முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இரவு நேரத்தில் தேவையின்றி வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும், சந்தேகப்படும்படி யாரைப் பார்த்தாலும் உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்களை இயக்கி வைக்கச் சொல்லி சாலையோரக் கடைகள் மற்றும் உணவகங்களுக்குப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்தக் கொள்ளையர்களை விரைவில் பிடித்து, இந்த நெடுஞ்சாலையை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றுவோம் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது.