மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டம், அம்பாஜோகை தாலுகாவைச் சேர்ந்த நாகேஷ் ஜர்தாப் (36) என்பவருக்கும், ப்ரீத்தி ராவத் என்றப் பெண்ணுக்கும் கோயிலில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்காகத் தரகருக்கு ரூ. 1.90 லட்சம் கமிஷன் கொடுக்கப்பட்ட நிலையில், மணமகன் வீட்டிற்கு வந்தச் சில மணி நேரங்களிலேயே, மணமகள் ப்ரீத்தி ராவத் கழிவறைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்துத் தப்பி ஓடினார்.
மணக்கோலத்தில் ப்ரீத்தி தனியாகச் சாலையில் நடந்து செல்வதைக் கண்ட கிராம மக்கள், மணமகன் வீட்டாரிடம் தகவல் அளித்தனர். அவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ப்ரீத்தியை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, அவர் முரண்பாடாகப் பேசியதால் போலீஸில் தகவல் கொடுத்தனர்.
போலீஸ் விசாரணையில், ப்ரீத்தி ராவத் ஒரு திருமண மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர் என்றும், பணத்திற்காக நாகேஷைத் திருமணம் செய்து சில மணி நேரங்களில் தப்பியோடத் திட்டமிட்டதுத் தெரிய வந்தது.
மேலும், ப்ரீத்தி பெயரில் போலியாக ஆதார் அட்டை உருவாக்கப்பட்டதும் வெளிச்சத்திற்கு வந்தது. தலைமறைவாக உள்ளத் தரகர் மற்றும் பெண்ணின் உறவினர்கள் மூவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மணப்பெண் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
