தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் எல்லையில் ஒரு கண்ணிவெடி வெடித்ததில் 5 தாய்லாந்து வீரர்கள் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்ப பெற்றனர். இந்நிலையில் நேற்று எல்லையில் இரு நாடுகளும் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. தாய்லாந்து எஃப் 16 விமானங்களை பயன்படுத்தி வான் வழி தாக்குதல்களையும் நடத்தியது.

தாய்லாந்து சுகாதார அமைச்சகம் ஒரு தாய்லாந்து வீரர் மற்றும் குழந்தை உட்பட 13 பேர் கொல்லப்பட்டதாகவும் 14 வீரர்கள் மற்றும் 32 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கம்போடியா தரப்பில் குறைந்தது 4 பேர் காயம் அடைந்துள்ளனர். தாய்லாந்து அனைத்து நில எல்லைகளையும் மூடி உள்ளதுடன் தங்கள் குடிமக்களை கம்போடியாவை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனைகள் இருந்து வருகிறது.

இந்நிலையில் தாய்லாந்து கம்போடியா எல்லையில் தொடரும் மோதல் காரணமாக தாய்லாந்தில் ஏழு மாகாணங்களான உபோன் ரட்சதாணி, பிரசாத் தா முயென் தோம், சிசாகெட், சோங் சாங் பிராக்யா பகுதிகளுக்கும் பான் களாங் லுயெக், பான் லேம் மற்றும் பான் பாட் காட், டிராட்டுக்கு எல்லைப் பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்று இந்திய சுற்றுலா பயணிகளுக்கு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.