பிரிட்டனில் 49 வயதான நீல் ஹாப்பர் என்ற மருத்துவர், 5 லட்சம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.5.4 கோடி) காப்பீட்டுத் தொகையை பெற வேண்டும் என்ற நோக்கில், தனது இரு கால்களையும் முழங்கால்களுக்கு கீழே விருப்பமோடு அகற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளன. அவரின் செயல்பாடு மோசடி சார்ந்ததா என்பதை கண்டறிய இவ்வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

விசாரணை நடவடிக்கையின் போது, நீல் ஹாப்பர் காப்பீட்டு தொகையை பெறுவதற்காக திட்டமிட்டுப் பிற மருத்துவரின் உதவியுடன் இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், “உடலுக்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் முழங்கால்களை அகற்றுவது எப்படி” என்பது பற்றிய சில பிரீமியம் வீடியோக்களை அவர் ஓர் வலைத்தளத்தில் இருந்து வாங்கியிருந்ததும், அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அத்துடன், தன்னை இரத்த நாளப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி, “இந்த நிலை விரைவில் பரவக்கூடியது” என்ற காரணத்தைக் கூறி காப்பீட்டு நிறுவனங்களை நம்ப வைக்க முயற்சித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு பரபரப்புடன் தொடரும் நிலையில், சமூக வலைதளங்களில் இச்சம்பவம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மருத்துவத்துறையில் பணியாற்றும் ஒருவரால் இப்படியான செயல் நடத்தியது பலரது நம்பிக்கையை சீர்குலைக்கக்கூடியதாக உள்ளது.